சனி, 21 நவம்பர், 2009

சிந்திப்போமா..?

எனது இந்திய நாட்டின் தலைநகரம் டெல்லி.
நாள்:1.3.2006.நேரம் நண்பகல் 12.00 மணி.எனது சிறு வயதிலிறிந்து தொலைக்காட்சி,பத்திரிக்கை போன்றவற்றில் பார்த்த,படித்த இந்தியா கேட் சாலை.

ஒவ்வொரு சுதந்திர,குடியரசு தினத்தன்றும் மிடுக்கான ராணுவ வீரர்களின் அணிவகுப்பு,நம் நாட்டின் கலாச்சார,பண்பாட்டை விளக்கும் நடனங்கள்,நாட்டின் பாதுகாப்புக்கு சாட்சியாய் கவச வாகனங்கள்,பீரங்கிகள் என இவற்றைக் காண தவமிருந்த நாட்கள் பலவுண்டு.

அந்த இந்தியா கேட் சாலையில் நானும் எனது நண்பர்கள் நான்கு பேரும் மேலே கூறிய நாளில் மதிய வேளையில்.

எங்கோ தென்கோடியில் சிறு குக்கிராமத்தில் பிறந்து (பக்கத்தில் உள்ள மதுரைக்குத் தனியாகச் சென்றதே +1 படித்த போது தான்) படித்து வளர்ந்த எனக்கு இந்த நிகழ்வு எத்தகைய மகிழ்ச்சியை,கிளர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை இங்கு எந்த வார்த்தைகளிலும் வெளிப்படுத்த என்னால் முடியாததால் தயவு செய்து எனக்காக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாங்கள் டெல்லிக்குச் சென்றது சுற்றுலாவுக்காக அல்ல.எங்களது தொழிற்சங்கம் பாராளுமன்றம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவே சென்று இருந்தோம்.ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு,அப்படியே ஒரு சுற்று வரும் போது தான் இந்தக் கட்டுரை தொடங்குகிறது.

அந்த மதிய வேளையில் இந்தியா கேட் சாலையில் நடந்து செல்வோர் எங்களைத் தவிர யாருமில்லை.இருபக்கமும் உள்ள கான்கிரிட் தூண்கள்,சங்கிலித் தடுப்புகளைத் தடவிக் கொண்டே அன்ன நடை என்பார்களே ..அது போல் நடை போட்டுக்கொண்டிருந்தோம்.

(இங்கே எங்களைப் பற்றிக் கூறியாக வேண்டும்.எங்களில் யாருக்கும் இந்தி எழுதவோ,படிக்கவோ,பேசவோ தெரியாது.ஆங்கிலமும் கூட பேச வராது.யாமறிந்த மொழிதனிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் இல்லை என தமிழ் மட்டுமே அறிந்த தமிழர்கள் என்பதை எங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.)

அப்பொழுது எங்களுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல்.அதுவும் தமிழில்.எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஏய்.நம்மாளுட....இது நாங்கள்.
நான் நினைச்சேன்.இந்த வெயிலுல இப்படி பைத்தியக்காரன மாதிரி நடக்கிறவனுங்க நம்மாளுங்கலாத்தான் இருப்பானுங்கன்னு நினைச்சேன்.இது அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

அவர் எங்களைப் பார்த்து பைத்தியக்காரனுங்க எனக் கூறியது கூட எங்களுக்கு உரைக்கவில்லை.நமது ஆளை அந்த இடத்தில் பார்த்த சந்தோசம் தான் எங்களுக்குப் பெரியதாக இருந்தது.

பரஸ்பர விசாரிப்புகள்.நீங்க எங்கே இருந்து வர்றிங்க, எதுக்கு வந்தீங்க ,இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க ? இது அவர். அண்ணா ,நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ,எத்தனை வருசமா இருக்கீங்க,குடும்பம் எல்லாம் இங்க தான் இருக்காங்களா?.இதெல்லாம் நாங்கள்.

மதுரை மாவட்டம்,தேனி சொந்த ஊர்.அவர் போலீஸ் துறையில் இருப்பதாகவும்,
பத்தொன்பது ஆண்டுகளாக டெல்லியில் பணிபுரிவதாகவும் கூறினார்.

அதற்கு மேல் அவர் கூறியது தான் இங்கு இந்தக் கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

நம்மள மாதிரி முட்டாள் பயலுங்க யாருமில்லே.இந்தியே கூடாதுன்னு சொல்லிக்கிட்டு திரியுற கருணாநிதி பேச்சை கேட்டு இந்தி படிக்கததாலே இங்க எத்தனை சிரமம் தெரியுமா?.ஒருமுறை பதவி உயர்வுக்கு தேர்வு எழுத வேண்டும்.நான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன்.அதைப் படித்துப் பார்த்த அதிகாரி வெள்ளைக்காரனுங்க தான் போயிட்டானுங்கள்ளே.இந்த .........மகனுங்க இன்னும் இங்கே ஏண்டா இருக்கானுங்க( சில வார்த்தைகள் எழுத முடியவில்லை) அப்படின்னு என் முன்னாடியே கூறினார்.இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் ....சொல்லிக்கொண்டே போகலாம்.என்னை விட இளையவர்கள் எல்லாம் பதவி உயர்வில் சென்றுவிட்டார்கள்.அதற்கு காரணம் இந்தி....தான்.

இதற்கெல்லாம் காரணமான கருணாநிதியோ தன் பேரனை மட்டும் இந்தி படிக்க வச்சு இங்கே வந்து ஆட்டம் போடவிட்டுருக்காரு.நீங்களாவது புரிஞ்சுக்கங்க. நம்ம தலைமுறை போனாலும் பரவாயில்லே.நம்ம குழந்தைங்களாவதுஇந்தி படிக்க ஏற்பாடு செய்யுங்க.இப்படி பேசிவிட்டு சும்மார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எங்களுடன் உட்கார்ந்து பேசிவிட்டு,வேலைக்குச் செல்லவேண்டும்.நேரமாகி விட்டது.எனக் கூறிச் சென்றார்.அவரை நாங்கள் மீண்டும் சந்திக்கவில்லை.ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டே உள்ளது.

அவர் கூறிய வார்த்தைகள் சரிதானா...?.நாம் (இந்தி படிக்காததால் அதிகமாக இழந்து உள்ளோமா?.அது எப்படி.தமிழை மட்டும் கற்று நாம் தமிழ் மொழியை வளர்த்திருக்கிறோமா.?ஆம்.தமிழ் வளர்ச்சியடைந்து உள்ளது என்றால் ...எவ்வாறு?.சுமார் நாற்பது ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமி எத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளது.
கணிப்பொறியில்...அறிவியலில்... பள்ளி கல்லூரிகளில் தமிழைக் கொண்டு வருவதில் எத்தகைய சாதனை புரிந்துள்ளோம்..?.நம் மனதுக்கு நிறைவானதாக இது உள்ளதா?.இல்லை எனில் ஏன்.?.இதற்க்கு எது தடையாக உள்ளது.ஆட்சி அதிகாரம் அனைத்தும் இருந்தும் இவற்றில் எல்லாம் தமிழைக் கொண்டு வருவதில் தடையாக இருந்தது எது.?.இவர்கள் முயன்று இருந்தால் முடிவடைந்திருக்காதா?.

தமிழ்..தமிழ்..என தமிழுக்காக தன் இன்னுயிரையே இழந்த பல தீரர்களின் சாம்பலில் ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களின் ஆசை இன்னும் நிராசையாகவே உள்ளது என்பது அறிய வில்லையா?.இப்படி எத்தனையோ .... கேள்விகள்?.கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இவற்றிற்குப் பதில் எப்பொழுது?.....யாரால் ...?.நாம் என்ன செய்யப் போகிறோம்?.இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டால் போச்சு என போய்க்கொண்டே இருந்தால் .....முடிவு.?.தமிழ்ச் சமுதாயமே ....தேரிழுக்கத் தயாராகுங்கள்......ஒன்றாய்...இரண்டாய்....நான்காய்....ஊர்கூடி.